search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணமலை சாமியார்"

    இளம்பெண்ணை கொன்றது திருவண்ணாமலை சாமியாரா இருக்குமோ என்ற கோணத்தில் விவரங்களை சேகரித்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பாகூர்:

    புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சோலை ரோட்டை சேர்ந்த அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 25). நேற்று காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் தலைமையில் மேலும் 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    முதலில் அவரது கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து பார்த்தனர். ஆனால் அவர் கொலை செய்ததற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே வேறு கோணத்தில் இப்போது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் விபூதி, குங்குமம் சிதறி கிடந்தது.

    கிருஷ்ணவேணி தலையில் பூ வைத்து சிவப்பு சேலை கட்டி மங்களகரமாக இருந்தார். அந்த இடத்தில் 2 சாக்குகள் விரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதில் பலர் அமர்ந்திருந்தது போன்ற அடையாளங்களும் இருந்தன.

    எனவே கொலை நடந்த இடத்தில் ஏதோ பூஜை நடந்திருக்க வேண்டும். பின்னர் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கொலை நடந்த இடத்தின் அருகே கோவில் ஒன்று உள்ளது. எனவே கோவிலை மையமாக வைத்து இந்த பூஜை நடந்ததிருப்பதாக கருதப்படுகிறது.

    எனவே பூஜையில் ஈடுபட்டவர்களே கிருஷ்ணவேணியை கொலை செய்து விட்டு அவருடைய நகைகளை பறித்து சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கிருஷ்ணவேணிக்கு சாமியார்கள் மீது அதிக நம்பிக்கை உண்டு. அடிக்கடி சாமியார்களை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை செய்வது, மாந்திரீகம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.

    எனவே அன்று இரவு ஏதோ ஒரு சாமியார் காட்டுக்குள் வைத்து பூஜை செய்யலாம் என அழைத்து பின்னர் கொலை செய்து நகையை பறித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருக்கிறது. அவற்றையும் கிருஷ்ணவேணி எடுத்து சென்று சாமியாரிடம் கொடுத்து பூஜை செய்திருக்கலாம். அதையும் கொலை நடந்ததற்கு பிறகு சாமியார் பறித்து சென்றிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

    2 வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது. அந்த பணத்தையும் கிருஷ்ணவேணி, சாமியாரிடம் கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

    கிருஷ்ணவேணி வீட்டுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. அவரை தேடி ஒரு படையினர் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர்.

    கிருஷ்ணவேணியின் செல்போன் மூலம் துப்பு துலக்க முயற்சித்து வருகின்றனர். அவர் கடைசியாக யார், யாரிடம் பேசினார். அடிக்கடி யாரிடம் பேசியுள்ளார் போன்ற விவரங்களை சேரித்து குற்றவாளியை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

    ×